கலெக்டர் மாற்றப்பட்ட அடுத்த நாளே அராஜகம்... உத்தரவை மீறிச் சென்ற அரசு பேருந்து... நள்ளிரவில் சிறைபிடித்த பொதுமக்கள்!

 
ஸ்ரீவைகுண்டம் அரசு பேருந்து சிறைபிடிப்பு ஸ்ரீவைகுண்டம் அரசு பேருந்து சிறைபிடிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த இளம்பகவத் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் பதவியில் இருந்தபோது, ஸ்ரீவைகுண்டம் மக்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து அரசுப் பேருந்துகளும் கட்டாயம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்ட ஒரே நாளில், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அவரது உத்தரவை மதிக்காமல் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

இலவச பேருந்து

நேற்று நள்ளிரவு ஸ்ரீவைகுண்டம் வழியாகச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று, வழக்கமான வழித்தடமான ஊருக்குள் வராமல், பைபாஸ் சாலை வழியாகவே செல்ல முயன்றது. இதனை முன்கூட்டியே கவனித்த ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள், அந்தப் பேருந்தை வழிமறித்துச் சிறைபிடித்தனர். ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள், "ஆட்சியர் மாறினால் உத்தரவும் மாறிவிடுமா?" எனக் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். "இனிவரும் காலங்களில் அரசுப் பேருந்துகள் ஊருக்குள் வராமல் சென்றால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்" எனப் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

பேருந்து போக்குவரத்து ஊழியர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியர், போக்குவரத்துத் துறையினரின் இந்தத் தன்னிச்சையான போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், முந்தைய ஆட்சியரின் உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.