8 மணி நேர சோதனை முடிவு! அன்பில் மகேஸ் 18-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
Sep 16, 2026, 16:57 IST
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருச்சி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (செப்.16) நீண்ட நேரம் சோதனை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டில் காலை தொடங்கிய சோதனை பல மணி நேரம் நீடித்தது. இதனுடன் தொடர்புடைய மேலும் சில இடங்களிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்டுள்ள பி.டி. அரசகுமார் தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்தான் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
