அன்பில் மகேஷின் நண்பர் வாளாடி கார்த்திக்குக்கு சம்மன் - ரூ.100 கோடி மோசடி வழக்கில் விசாரணை தீவிரம்!
தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நண்பரான வாளாடி கார்த்திக்குக்குக் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி உள்ளிட்ட இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய பி.டி.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் தொடர்ச்சியான விசாரணையின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 16ஆம் தேதி காவல்துறையினர் சோதனையும் நடத்தினர்.
அன்பில் மகேஸின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவரது நண்பரான வாளாடி கார்த்திக்குக்குக் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
