"அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!
தூத்துக்குடியில் காவல் துறையினரின் சித்திரவதையால் விசாரணைக் கைதி அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனப் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் தொடர்ச்சியாக நிகழும் காவல் மரணங்களைச் சுட்டிக்காட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாகர்கோவிலில் விசாரணைக் கைதி உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பரபரப்பு அடங்குவதற்குள், தூத்துக்குடியில் மற்றொரு இளைஞர் காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவல்துறையினரின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களும் அடுத்தடுத்து நிகழ்வது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் மீதான கேள்வியை எழுப்பியுள்ளது. இச்சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், மாநிலக் காவல்துறையின் கீழ் விசாரணை நடைபெற்றால் உண்மை வெளிவராது என்பதால், கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அருணாச்சலத்தின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மற்றும் இதில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
