“சொந்த மகனை நம்பாத அளவுக்கு அய்யாவை மாத்திட்டாங்க!” - மேடையிலேயே கதறியழுத அன்புமணி மகள்கள்!

 
anbumani anbumani

“என் 5 மாதக் குழந்தையைக்கூட அய்யா (ராமதாஸ்) வந்து பார்க்கவில்லை; சொந்த மகனை நம்பாத அளவுக்கு அவரைச் சிலர் மாற்றி வைத்துள்ளனர்” என அன்புமணி ராமதாஸின் மகள்கள் மேடையில் கதறி அழுத சம்பவம் பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌமியா அன்புமணி

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்துப் பிரசாரம் செய்து வரும் அவரது மகள்கள், நேற்று பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணிக்கு எதிராகப் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்துப் பேசினர். அப்போது:“தாத்தாவுக்கும் (ராமதாஸ்) எங்களுக்கும் இடையே மிகப்பெரிய சுவரை எழுப்பிவிட்டார்கள். குடும்பமாக இருந்த எங்களை இன்று தெருவில் நிற்க வைத்துள்ளனர். ஒரு வருடமாகத் தாத்தாவைப் பார்க்கக் கூட எங்களை அனுமதிப்பதில்லை.”

“ஜி.கே.மணி போன்றவர்கள் தங்களது சுயநலத்திற்காகச் சொந்த மகனையே (அன்புமணி) அய்யா நம்பாத அளவுக்கு மூளைச்சலவை செய்துள்ளனர். எனக்குக் குழந்தை பிறந்து 5 மாதங்களாகியும் தாத்தா வந்து பார்க்கவில்லை. ஒரு போன் கூட அவரால் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு அவரைச் சிறைபிடித்து வைத்துள்ளனர்” எனச் சங்கமித்ரா ஆக்ரோஷமாகப் பேசினார்.

கடந்த சில மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் ‘ராமதாஸ் - ஜி.கே.மணி’ ஒரு அணியாகவும், ‘அன்புமணி ராமதாஸ்’ தனி அணியாகவும் செயல்பட்டு வருவது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.

சௌமியா அன்புமணி

கட்சியின் சின்னம் மற்றும் பெயர் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

“அய்யா அழுவதற்குக் காரணமான துரோகிகளை மன்னிக்காதீர்கள்” என அன்புமணி மகள்கள் அழுதபடி கேட்டுக் கொண்டது, பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து, ஒருவரை ஒருவர் மேடையில் சாடிக் கொள்வது பாமக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. குறிப்பாக, “துரோகி” என ஜி.கே.மணியை அன்புமணி மகள்கள் பகிரங்கமாகச் சாடியிருப்பது, வன்னியர் வாக்கு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.