நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடம் கையூட்டு வாங்குவதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்!
தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடம் இருந்து கட்டாயமாகக் கையூட்டு பெறப்படும் நிலைமை நீடிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் பல நாட்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலும், கூடுதல் எடை என்ற பெயரிலும் ஒரு குவிண்டாலுக்கு மொத்தம் 325 ரூபாய் வரை பறிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். உணவுத் துறை அமைச்சரின் கள ஆய்விலேயே இந்த அநீதி உறுதியாகியிருந்தும், அரசுத் தரப்பில் ஊழலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாதது பெரும் கவலையளிக்கிறது.

கடைநிலை ஊழியர்களை மட்டும் இடைநீக்கம் செய்வதால் இந்த நீண்டகால ஊழல் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதுடன், அங்குப் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு நிலையத்திற்கும் தவிர்க்க முடியாத செலவுகளுக்காகச் சேர வேண்டிய 20 ஆயிரம் ரூபாய் முன்வைப்புத் தொகையை அரசு முறையாக வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களின் கூலிப் பிரச்சினையைச் சீரமைத்தால் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் நிலவும் முறைகேடுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

தனியார் வணிகர்களை விட அரசு நிலையங்களில் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே உழவர்கள் வாரக் கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் அங்கேயும் தொடர்ந்து கையூட்டுப் பறிக்கப்பட்டால், உழவர்கள் வேறு வழியின்றித் தனியார் வியாபாரிகளை நாடிச் செல்லும் ஆபத்தான சூழல் உருவாகும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அரசு நியாயவிலைக் கடைகளுக்குத் தேவையான அரிசி கிடைக்காமல் பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும். எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் நெல் கொள்முதல் நிலையச் சுரண்டல்களைத் தடுத்து, உழவர்களிடம் இருந்து நேர்மையாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
