அமாவாசை தினத்தில் புண்ணியம் சேர்க்கும் முன்னோர் வழிபாடு!

அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். நம் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெறக்கூடிய அற்புத நாள். மாதந்தோறும் அமாவாசை வரும். ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களை வணங்குவதற்கு உரிய நாள்.
வருடத்தில், பன்னிரெண்டு அமாவாசைகள். இந்த அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த திதி நாளாக, புனித நாளாகப் போற்றப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை என மூன்று அமாவாசையில், மறக்காமல் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
அமாவாசை முதலான தர்ப்பண நாட்களில், அவசியம் தர்ப்பணம் முதலான காரியங்களில் ஈடுபடவேண்டும். தர்ப்பையைக் கைவிரல் இடுக்கில் வைத்துக் கொண்டு, முன்னோர்களின் பெயர்களையும் கோத்திரங்களையும் மூன்று முறை சொல்லி வழிபடவேண்டும். அப்படிச் சொல்லும் போது, எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.
வீட்டுக்கு ஆச்சார்யரை அழைத்து இந்த தர்ப்பணத்தைச் செய்யலாம். அதேபோல், வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களைச் சுத்தம் செய்து, நன்றாகத் துடைத்து, பூக்களிட வேண்டும். குறிப்பாக, துளசி அல்லது வில்வம் சார்த்தி வழிபடவேண்டும்.
அதேபோல் கடல் நீராடி அமாவாசை வழிபாடு செய்வதும் நதியில் நீராடி முன்னோர் வழிபாடுகளை மேற்கொள்வதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்; நம் பாவங்களையெல்லாம் போக்கும்!
அமாவாசை நாளில், முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து படையலாக்கலாம். அதேபோல் நம் குடும்ப வழக்கத்தின்படியும் உணவை வைத்துப் படையல் போடலாம். இப்படி முன்னோர்களுக்குப் படையலிடும்போது, குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து இருந்து, பூஜிக்கவேண்டும். இயலாத பட்சத்தில், கணவனும் மனைவியுமாக தம்பதியாக நின்று, இந்தப் படையலை இடலாம். முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம். இதனால் நம் முன்னோர்கள் அகம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்.
வீட்டில் பூஜையறையில் குத்துவிளக்கேற்றிக் கொள்ளவேண்டும். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி முன்னோர்களின் படங்களை வைக்கலாம். தர்ப்பணம் செய்யும்போதும் கிழக்கு, வடக்கு என ஏதேனும் ஒரு திசையில் முன்னோர்களின் படங்களை வைக்கலாம்.
சனி பகவானுக்கு உகந்த கோதுமைத்தூள், முன்னோருக்குப் படையலிட்ட உணவு ஆகியவற்றை காகத்துக்கு வைத்து வணங்கலாம். முக்கியமாக, பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கி பிரார்த்தனை செய்வது பாவங்களில் இருந்தும் தோஷங்களில் இருந்தும் நம்மை விடுபடச் செய்யும்.
தை அமாவாசையில் எதை மறந்தாலும் முன்னோர் வழிபாட்டை மட்டும் மறக்கவே கூடாது. எனவே அமாவாசை நாளில் நம் முன்னோரை வணங்குவோம். பசுவுக்கு அகத்திக்கீரையும் காகத்துக்கு படையலும் இட்டு, அவர்களை ஆராதிப்போம்!
நம் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். புண்ணியங்கள் பெருகி நிம்மதியாக வாழச் செய்வார்கள் நம் முன்னோர்கள்!
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!