காட்டு யானை தாக்கி விவசாயி பலி! மாடுகளை மேய்க்க சென்றபோது சோகம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அஞ்செட்டி அருகே உள்ள ஒன்னேபுரம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா (59). விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை மாடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை கூட்டம் முனியப்பாவை துரத்தியதாக கூறப்படுகிறது. இதில் யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முனியப்பாவின் உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அஞ்செட்டி மற்றும் ஒன்னேபுரம் சுற்றுவட்டார கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும், குறிப்பாக கால்நடைகளை மேய்க்கச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
அஞ்செட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.விவசாயி முனியப்பா காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
