தென்காசி வாசுதேவநல்லூர் மடத்தில் பழங்காலக் கல்வெட்டு, சிற்பங்கள் கண்டெடுப்பு!

 
தென்காசி தொல்லியல் கண்டுபிடிப்பு வாசுதேவநல்லூர் பழங்கால கல்வெட்டு வரலாற்றுச் சிற்பங்கள்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அமைந்துள்ள சிந்தாமணிப்புதூர் கிராமத்தில் உள்ள பழமையான அன்னதான மடத்தில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், 120 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டும், கலைநயமிக்கப் புடைப்புச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தத் தொல்லியல் கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையேயும் வரலாற்று ஆய்வாளர்களிடையேயும் பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிந்தாமணிப்புதூரில் அமைந்துள்ள பழமையான அன்னதான மடத்தில் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள தூண் ஒன்றில் கி.பி. 1905-ஆம் ஆண்டைச் சேர்ந்த (தமிழ் கொல்லம் ஆண்டு 1080) 12 வரிகள் கொண்ட பழமையான கல்வெட்டு பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இந்தக் கல்வெட்டைப் பொறித்து மடத்தை அமைத்த பெருமாள் குடும்பன் என்பவரது பெற்றோர் உருவங்கள், மடத்தின் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பக் காலத்தில் வழிப்போக்கர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உணவளிக்கும் நன்னோக்கத்துடன் இந்த அன்னதான மடம் நிறுவப்பட்டுச் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் உரியப் பராமரிப்புகள் ஏதும் இல்லாததன் காரணமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்து சிதிலமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் கொடைச் சிறப்பையும் பண்பாட்டையும் பறைசாற்றும் இத்தகைய வரலாற்றுச் சின்னங்களைப் பழமை மாறாமல் புனரமைத்து, தொல்லியல் துறை மூலமாகத் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்களும் உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.