ஆந்திராவில் கவிழ்ந்த பீர் லாரி… பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்... வைரல் வீடியோ!

 
பீர்

 

ஆந்திரப் பிரதேசத்தில் பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர கால்வாயில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, சாலையில் சிதறிய பீர் பாட்டில்களைப் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏலூரு மாவட்டம், ஆகிரிபல்லி மண்டலத்தில் உள்ள எஸ்.ஏ. பேட்டை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து 1,900 பெட்டி கிங்ஃபிஷர் பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர கால்வாயில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் தாக்கத்தில் லாரியில் இருந்த பீர் பெட்டிகள் சாலையில் சிதறின. பல பாட்டில்கள் உடைந்து பீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையே, உடையாமல் இருந்த பாட்டில்களைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாகச் சென்றவர்கள் அவற்றை எடுத்துச் செல்லத் தொடங்கினர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், பீர் பாட்டில்களை எடுத்துச் சென்றவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து, விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.