ஒரே ஓட்டில் தோல்வி: வாக்காளர்களிடம் பணம், சேலையைத் திருப்பி வாங்கிய வேட்பாளர்!
ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தலில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு வழங்கிய பணம் மற்றும் பட்டுச் சேலைகளைத் திருப்பி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா மாவட்டம் சேஷமாம்பாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாப்பராஜ் பள்ளி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட இந்திரம்மா என்பவரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்குப் பணம், பட்டுச் சேலைகள் மற்றும் மது பாட்டில்களை அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. தோல்வி அடைந்த விரக்தியில் வாக்காளர்களைக் கடுமையாகத் திட்டிய இந்திரம்மா, தனக்கு எதிராக வாக்களித்தவர்கள் கொடுத்த பணம் மற்றும் பொருட்களை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் இந்திரம்மாவிடம் பணம் மற்றும் பட்டுச் சேலைகளைத் திருப்பி அளித்துள்ளனர். இந்தக் காட்சிகள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
