நாய் கடிக்கல... காயத்தை நக்கியது! 2 வயது குழந்தை ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு - ஆந்திராவில் அதிர்ச்சி

 
2

 

ஆந்திரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் முகத்தில் ஏற்பட்ட காயத்தை தெருநாய் நக்கியதாக பெற்றோர் தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் ரேபிஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். ஆனால், ரேபிஸ் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது என்பது ஆய்வகப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படவில்லை.

பல்நாடு மாவட்டம் ஈபுரு மண்டலத்தில் உள்ள பொக்கராம் கிராமத்தைச் சேர்ந்த சோஹன் ருத்ரான்ஷ் என்ற 2 வயது குழந்தை, கடந்த செப்டம்பர் 2-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

நாய் தெருநாய் வெறிநாய்

அப்போது அங்கு வந்த தெருநாய் குழந்தையின் முகத்தில் இருந்த காயத்தை நக்கியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். நாய் கடித்ததற்கான காயம் எதுவும் குழந்தையின் உடலில் இல்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, செப்டம்பர் 22-ம் தேதி குழந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர். தண்ணீரை பார்த்து பயப்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, குழந்தை நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 23-ம் தேதி குழந்தை உயிரிழந்தது.

குழந்தைக்கு ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் ரேபிஸ் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதே நேரத்தில், ரத்தப் பரிசோதனை மூலம் ரேபிஸ் இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும், மூளை அழற்சியும் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் பல்நாடு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பொக்கராம் கிராமத்தில் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் சமீபத்தில் தெருநாய் தாக்குதல்கள் நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. ஆய்வில் இதுபோன்ற வேறு சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாய் கடி மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட தோலில் விலங்கின் உமிழ்நீர் படுவதும் ரேபிஸ் பரவும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதுபோன்ற சம்பவங்களை அலட்சியம் செய்யக்கூடாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய விலங்கு தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.