இன்று ஆந்திரா செல்கிறார் முதல்வர் விஜய்.. சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை நேரில் சந்திக்கிறார்!
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லவுள்ளார். அங்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதிநீர் பற்றாக்குறை குறித்தும், தமிழகத்திற்குத் தடையின்றி நீர் வழங்குவது தொடர்பாக ஆந்திரத் தலைவர்களுடன் முதலமைச்சர் விஜய் விவாதிக்கவுள்ளார்.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படலாம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயவாடாவில் நடைபெறும் 'விஜயவாடா உத்ஸவ் 2.0' விழாவில் கலந்து கொள்ள உள்ள முதன்முறையாக ஆந்திரா செல்லவுள்ள முதலமைச்சர் விஜய், அங்குள்ள முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும் உடன் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளார். மேலும், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் சில அமைச்சர்களையும் முதல்வர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 2 மணி: சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆந்திராவுக்குப் புறப்படுகிறார்.

மாலை 3:30 மணி ஆந்திராவில் உள்ள ஞானாவரம் (கன்னாவரம்) விமான நிலையத்தைச் சென்றடைகிறார். மாலை 4:15 மணி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மாலை 6 மணி விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இரவு 8:30 மணி விஜயவாடாவில் உள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
