“ஓட்டு போடாதவங்க பணத்தைத் திருப்பிக் கொடுங்க!” – தோல்விக்குப் பின் வாக்காளர்களிடம் பணம் கேட்ட வேட்பாளர்

 
aandra

 

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சி தேர்தலில் தோல்வியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு வழங்கிய பணத்தைத் திரும்பக் கேட்டுப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலமனேர் நகராட்சியின் 32-வது வார்டில் போட்டியிட்ட பிரசாத் ரெட்டி, ஜனசேனா கட்சி வேட்பாளர் பூலா சைதன்யாவிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோவில், தேர்தல் செலவுக்காக ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாகவும், வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் பணம் பெற்றும் தனக்கு வாக்களிக்காத சுமார் 400 பேர் அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பணத்தைத் திருப்பித் தராவிட்டால் அவர்களது வீடுகளுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும், மாரியம்மன் சும்மா விடமாட்டாள் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

திரும்பப் பெறப்படும் பணத்தைக் கொண்டு, தேர்தலின்போது அளித்த குடிநீர் வசதிக்கான வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Lost election, return my money: YSRCP candidate

இதற்கிடையே, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி பிரசாத் ரெட்டியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.