”பத்தினி என நிரூபி”.. கொதிக்கும் எண்ணெய்யில் மனைவியை கை விடச் சொன்ன கொடூர கணவன்..!!

கணவன், தன் மனைவியை கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட்டு உத்தமி என நிரூபித்து காட்டு என தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், புத்லப்பட்டில் உள்ள தேனேபள்ளே பகுதியில் வசித்து வருபவர் விவசாயி குண்டையா. இவர் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தனக்கு உண்மையாக இருப்பதை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விடச் சொல்லியிருக்கிறார். மேலும் மனைவி இவ்வாறு செய்வதை கிராம மக்கள் அனைவரும் வந்து பார்க்கவும் கூறியுள்ளார். இது அந்த கிராமத்தின் வழக்கமான நடைமுறையாகவும் உள்ளது.
அதன்படி அவரது வீட்டில் கிராம மக்கள் அனைவரும் கூடியுள்ளனர். உடனே இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல வளர்ச்சி அலுவலர் கௌரி, காவல்துறையினருடன் அந்த கிராமத்திற்குச் சென்று அதனை தடுத்து நிறுத்தி அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளார்.
இதுகுறித்து மண்டல வளர்ச்சி அலுவலர் கௌரி கூறுகையில், 'குண்டையா மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். அப்போதுதான் தனக்கு உண்மையாக இருப்பதை நிரூபிக்க இந்த சோதனையை செய்ய வற்புறுத்தியுள்ளார். பதிலுக்கு குண்டையாவும் இதனைச் செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். போலீஸ் காவலில் இருக்கும் அவருக்கு மருத்துவ கவுன்சலிங் கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றார்.