காதலனுக்கு நிச்சயதார்த்தமானதால் ஆத்திரம்... மணப்பெண் முகத்தில் ஆசிட் வீசிய காதலி!
டெல்லி இந்திரா விஹார் பகுதியில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக 26 வயது இளம்பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், வேறொரு பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தத் தகவலை அறிந்த அந்த இளைஞரின் பழைய காதலி, கடும் ஆத்திரமடைந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக அந்த இளைஞருடன் காதலில் இருந்த அவர், இந்தத் திருமணத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அச்சமயம், காதலன் மணம் முடிக்கப்போகும் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தாக்குதலுக்குள்ளான இளம்பெண் உடனடியாக மீட்கப்பட்டு, டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த 26 வயது பெண்ணை இன்று கைது செய்தனர். விசாரணையில், "தனது காதலன் தன்னை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணை மணப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்தப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கவே இவ்வாறு செய்தேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
