அம்பயரின் தவறான தீர்ப்பால் ஆவேசம்.... ஸ்டம்பை அடித்து நொறுக்கிய இந்திய கிரிக்கெட் கேப்டன்.. வைரலாகும் வீடியோ!

 
ஸ்டம்ப் கேப்டன் கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டை ஜெண்டில்மேன் விளையாட்டு என்று கொண்டாடுவார்கள். ஆனாலும், மைதானத்தில் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல சமயங்களில் வீரர்கள் சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. இந்தியாவின் சேத்தன் சர்மா தொடங்கி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் இப்படி தங்களது அதிருப்தியையும், கோபத்தையும் பல சமயங்களில் மைதானத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடனான போட்டிகள் எல்லாம் இப்படி சர்ச்சைக்கு பெயர் போனது.

இந்நிலையில், நடுவரின் தவறான தீர்ப்பில் அதிருப்திக்குள்ளான இந்திய கேபடன் ஹர்மன்பிரீத், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, ஸ்டெம்பை தாக்கி அடித்து நொறுக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ஆண்கள் கிரிக்கெட் அணியினருக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்கிற ரீதியில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனின் செயல் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், 3 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் இருந்தது.

தொடரின் கடைசி போட்டி டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கானா ஹோக் 107 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் சினே ராணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டாக, போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரும் 1-1 என்ற கணக்கில் சமன் அடைந்தது. மூன்றாவது போட்டியில், இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் செயல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


அந்த போட்டியில், இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடுவர் மீது கடும் கோபப்பட்ட சம்பவம் தான் விவாதத்தை கிளப்பியுள்ளது. போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற நிகழ்விலும் நடுவரை அவர் விமர்சித்தார். நஹிதா அக்தரின் பந்தில் ஹர்மன்பிரீத் கேட்ச் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். இருந்தாலும் பந்து அவரது கால்-பேடில் பட்டு ஸ்லிப் பீல்டரிடம் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் நடுவரின் முடிவில் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிருப்தி அடைந்தார். நடுவரின் இந்த முடிவுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் ஸ்டம்பை தாக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பெருகிய முறையில் வைரலாகி வருகிறது. ஹர்மன்பிரீத் பெவிலியின் நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது நடுவரிடம் ஏதோ சொன்னார்.  

ஹர்மன்ப்ரீத் கவுர் இப்போது போட்டிக் கட்டணக் கழிப்புடன், ஓரிரு போட்டிகளில் விளையாட தடை விதிப்பின் அபாயத்தில் உள்ளார். குறிப்பாக, வீரர்கள் கோபத்தில் போட்டி உபகரணங்களை தவறாக பயன்படுத்த முடியாது என்பது ஐசிசியின் நடத்தை விதிகளில் தெளிவாக உள்ளது. நடுவரின் முடிவுக்கு எதிராக அதிருப்தி காட்டவும், போட்டி அதிகாரிகளுக்கு எதிராக பகிரங்க அறிக்கைகளை வெளியிடவும் வீரர்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஹர்மன்ப்ரீத்தின் இந்த செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் குறித்து போட்டி நடுவர் ஐசிசிக்கு என்ன அறிக்கை அளிக்கிறார் என்பதை பொறுத்துதான் அவர் மீதான நடவடிக்க தெரியவரும்.

Harmanpreet Kaur

போட்டிக்கு பிறகு ஹர்மன்பிரீத் கூறுகையில், “நாங்கள் இந்த ஆட்டத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம். இந்த போட்டியில் நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது. அடுத்த முறை நாங்கள் வங்கதேசத்துக்கு வரும் போது, இதுபோன்ற நடுவர்களின் முடிவையும் சமாளிக்கும் வகையில் தயாராகுவோம். சூழ்நிலைக்கு தகுந்தபடி வங்கதேச அணியினர் நன்றாக பேட்டிங் செய்தனர். நடுவில் நாங்கள் சற்று ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்கையில் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தோம். நடுவர்களின் சில மோசமான முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web