அனில் அம்பானியின் ரூ.3,034 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி!நடவடிக்கை!

 
அனில் அம்பானி அனில் அம்பானி

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான சுமார் 3034 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. வங்கி முறைகேடு மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நிறுவனத்தின் பெயரில் வங்கியில் கடன் பெற்றுவிட்டு, அந்தப் பணத்தைச் சட்டவிரோதமாகத் தனது மற்ற நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை மொத்தம் 19344 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனில் அம்பானி

அனில் அம்பானி சுமார் 17000 கோடி ரூபாய் அளவிற்குப் பண மோசடி செய்ததாக சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாகச் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து தனது பிடியை இறுக்கியுள்ளது. வங்கி அதிகாரிகளுடன் இணைந்து முறைகேடாகக் கடன் பெற்றதும், அந்தப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனால் ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான பிடி நாளுக்கு நாள் இறுகி வருவதால் அந்த நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அனில் அம்பானி

மத்திய அரசின் இந்தத் தொடர் நடவடிக்கையினால் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான பல முக்கிய அலுவலகங்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் தற்போது அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர். மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஒரு நிறுவனம், தொடர்ச்சியான கடன் புகார்களில் சிக்கிச் சொத்துக்களை இழந்து வருவது இந்தியத் தொழில் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.