அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் புறப்பட்ட ஸ்டாலின், உதயநிதி!
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – காவ்யா மாறன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னையில் இருந்து கிரீஸ் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சென்னையில் இருந்து இன்று (நவம்பர் 9) அதிகாலை 3.50 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருவரும் பயணம் மேற்கொண்டனர். துபாய் வழியாக கிரீஸ் செல்லும் அவர்கள், நவம்பர் 13-ம் தேதி சென்னை திரும்புவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண நிகழ்ச்சிகள் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்கச் சென்றுள்ளனர்.
திருமணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
