நவ.11ல் திருமணம்... காவ்யா மாறனை கரம் பிடிக்கிறார் அனிருத்... கிரீஸ் நாட்டில் ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழ் சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறனும் காதலித்து வருவதாகத் தொடர் கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இவர்களின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் உறுதியாகியுள்ளன. இசையுலகையும் கிரிக்கெட் உலகையும் இணைக்கும் ஒரு மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படும் இந்தத் திருமணம், வெளிநாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

நீண்ட காலமாகப் பரவி வந்த வதடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்தத் திருமணம் செஷல்ஸ் நாட்டில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் அழகிய கடற்கரைகள் மற்றும் கண்கவர் இயற்கைக்காட்சிகள் நிறைந்த கிரீஸ் நாடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திருமண விழாவில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த மிக முக்கியப் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். இதற்காகத் சிறப்பு விருந்தினர்களை அழைத்துச் செல்வதற்காக பிரத்யேகமாக 4 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், திருமணத் தேதியை ஒட்டியுள்ள நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குத் தனது இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் கோர்ப்புப் பணிகளை அனிருத் முழுமையாக ஒத்திவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கிரீஸ் நாட்டில் நடைபெறும் திருமணத்தைத் தொடர்ந்து, திரைத்துறை நண்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை வழங்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர் நேரில் ஹைதராபாத் சென்று, தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்து, நவம்பர் 21-ல் சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
