"விரைவில் ஆட்சி கவிழும்" – அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் பரபரப்பு!
"தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மக்கள் நலனுக்கான ஆட்சி அல்ல என்றும், விரைவில் தவெக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கிளர்ந்து எழுந்து விலகும்போது இந்த ஆட்சி கவிழும்" என்றும் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தவெக தலைமை மற்றும் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசுகையில், "இன்றைக்குத் தமிழக முதலமைச்சர் மக்கள் நலனுக்காக ஆட்சி செய்யவில்லை. மாறாக, மக்களை எந்தெந்த வழிகளில் எல்லாம் ஏமாற்ற முடியுமோ, அதை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறார். 'இப்படி ஒரு முதலமைச்சர் நமக்குத் தேவையா?' என்று இன்றைக்குப் பொதுமக்கள் தங்களுக்குள் கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது."

தொடர்ந்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்துப் பேசிய அவர், ஆளும் தரப்பில் நிலவும் உட்கட்சி பயத்தை வெளிப்படுத்தினார். தவெக எம்.எல்.ஏ-க்கள் மீது தற்போதைய முதலமைச்சருக்கே முழுமையான நம்பிக்கை இல்லை. அதன் காரணமாகவே அவர்கள் மீது குதிரை பேரம் உள்ளிட்ட அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் ஆளும் தலைமை ஏவி வருகிறது.
இத்தகைய மிரட்டல்கள் மூலம் தங்களை அவர்கள் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று முதல்வர் நினைக்கிறார். ஆனால், மிரட்டல்களுக்குப் பயப்படாமல் மொத்தமாகத் தவெக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒரு நாள் கிளர்ந்து எழுவார்கள். தங்களது பதவிகளைத் துறந்து அவர்கள் அனைவரும் ஒரே நாளில் வெளியெறும்போது, இந்த தவெக ஆட்சி கவிழ்வது நிச்சயம்.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே எதிர்க்கட்சியான திமுக, அரசின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த "ஆட்சி கவிழ்ப்பு" எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
