ஆனித் தேரோட்டம்... நெல்லையப்பர் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

 
நயினார் நெல்லையப்பர்

உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் நயினார் நாகேந்திரன் கோவிலுக்கு நேரில் சென்று மனமுருகி சாமி தரிசனம் செய்தார்.

திருநெல்வேலி மாநகரம் டவுன் பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க 520-வது ஆனித் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டுப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், திருவிழா அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதைச் உறுதி செய்யத் திருநெல்வேலி மாநகரக் காவல் துறையினர் நகர் முழுவதும் பல்வேறு பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


இந்தச் சூழ்நிலையில், நேற்று இரவு நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனை நேரில் தரிசித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இதுகுறித்துத் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில், "உலகப் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் திருவிழாவின் எட்டாம் நாளில், அருள்மிகு நெல்லையப்பர் சுவாமியை மனமுருகி தரிசிக்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிடைத்தது. இந்த புனித தருணத்தில், பாரத மக்கள் அனைவரும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று நெல்லையப்பர் சுவாமியிடம் மனமார பிரார்த்தித்தேன்."

மேலும் அவர் தனது பதிவில், "திருநெல்வேலி மக்களோடு மக்களாக, இந்த நெல்லை சீமையின் மண்ணின் மைந்தனாக இணைந்து இந்த மகத்தான திருவிழாவில் பங்கேற்றது என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் ஒரு அழகிய அனுபவமாக அமைந்தது. அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி மற்றும் காந்திமதி அம்மாள் அருள் அனைவரின் வாழ்விலும் என்றும் பொழியட்டும்!" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.