அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல் கைது... மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடவடிக்கை!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர் ஞானவேல் பாபு, பாலியல் குற்றச்சாட்டின் கீழ் நெல்லையில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவருக்கு, பேராசிரியர் ஞானவேல் பாபு நீண்டகாலமாகப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவிக்குத் தொலைபேசி வாயிலாகவும், பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் சந்திக்கும் போதும் அநாகரீகமான முறையில் பேசியும், பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டும் வந்ததாக அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

மாணவியின் புகாரைத் தொடர்ந்து, கோட்டூர்புரம் போலீசார் பேராசிரியர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த ஞானவேல் பாபு தலைமறைவானார். அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், செல்போன் சிக்னல் அடிப்படையில் அவர் நெல்லையில் இருப்பதை அறிந்து அங்கு விரைந்தனர்.
இன்று மாலை நெல்லையில் பதுங்கியிருந்த ஞானவேல் பாபுவை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரை விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டுள்ளனர். மாணவியின் புகார் குறித்துப் பல்கலைக்கழகத்தின் உள் புகார் கமிட்டி விசாரணை நடத்தியது.

முதற்கட்ட விசாரணையில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் மீது அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
