ஒரே நாளில் 16 லட்சத்தைக் கடந்த உறுப்பினர்கள் சேர்க்கை... அண்ணாமலையின் விஸ்வரூபத்தால் பாஜக அதிர்ச்சி!

 
அண்ணாமலை அண்ணாமலை

 

தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை நேற்று முன்தினம் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் மக்கள் தங்களை இணைத்துக் கொள்வதற்கான பிரத்யேக இணையதள முகவரியையும் அவர் அறிமுகப்படுத்தினார். இந்த அறிவிப்பு வெளியான உடனே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் மற்றும் இளைஞர்கள் அவரது புதிய இயக்கத்தில் தங்களை மிக ஆர்வமாக இணைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

அண்ணாமலை

இந்தச் சூழ்நிலையில் இணையதளம் மூலமாக அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 16 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 200 முதல் 300 பேர் வரை என அடுத்தடுத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு புதிதாக இணைபவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுவதால் தமிழக பாஜக தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ‘நாங்கள் தலைவர்கள்’ இயக்கத்திற்கு மக்கள் அளித்துள்ள பேராதரவு பெரும் நெகிழ்ச்சியையும் பொறுப்பையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். மேலும் இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல என்றும், நல்ல மாற்றத்தை விரும்பும் மக்களின் கூட்டுப் பயணம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.