முதலமைச்சரின் செயலாளர்களாக அண்ணாதுரை, விஷ்ணு நியமனம் - அரசாணை வெளியீடு!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகத்தில் நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில், முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துத் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலமைச்சரின் 3-வது தனிச் செயலாளராக டாக்டர் அ. அண்ணாதுரை ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக வெ. விஷ்ணு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார், இந்த நிர்வாக மாற்றங்களுக்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உயர்மட்ட நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே சுகாதாரத்துறைச் செயலராக இருந்த செந்தில்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலராக இருந்த லட்சுமி பிரியா ஆகியோர் முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாகப் பொறுப்பு வகித்து வருகின்றனர். தற்போது கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், அரசு அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் கூடுதல் வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய நியமனங்கள் அரசு நிர்வாக இயந்திரத்தில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
