ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் SIT விசாரணை அமைக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் பல ஆண்டுகளாக இத்தகைய குற்றச் செயல்கள் தொடர உதவிய மற்றும் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயன்ற அனைவரையும் வெளிக்கொண்டுவர உடனடியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளியையும் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி ஆரம்பத்தில் வழக்கை முடிக்க முயன்ற காவல்துறையின் செயல் விமர்சிக்கத்தக்கது என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரே தற்போது உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், பல சிறுமிகள் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ள அவர், விசாரணையைத் தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை முழுமையாகப் பாதுகாக்கவும் உடனடியாக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் எனத் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
