தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டி - அண்ணாமலை மாஸ் அறிவிப்பு!

 
அண்ணாமலை

மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில் நடைபெற்ற மாபெரும் பசுமை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அண்ணாமலை, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும், 2031-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் தாங்கள் தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு நேரடியாகக் களமிறங்கிப் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, தற்கால அரசியல் சூழல் குறித்தும், கட்சிகள் தாவுவது குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் கூட முழுமையாக ஆகவில்லை; அதற்குள் கையில் இருக்கும் மை கூடக் காயாத நிலையில், கட்சி மாறுவது, வேட்டி மாற்றுவது, ஆட்சி மாறுவது எனத் தொடர் நாடகங்கள் அரங்கேறுகின்றன. இந்தத் கேடுகெட்ட அரசியல் கலாச்சாரத்தை முற்றிலும் உடைத்தெறிவதற்காகவே 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு இன்று களத்திற்கு வந்துள்ளது" என்று தெரிவித்தார்.

அண்ணாமலை

மேலும், மக்கள் தங்களது பாதங்களைத் தொட்டு வாக்குகளைப் பெற்றுச் செல்லும் வேட்பாளர்கள், தாங்கள் எதற்காக ஓட்டளித்தோம் என்பதைக் கூட மறந்துவிட்டுப் பிற்காலத்தில் கட்சி தாவுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் அதிகாரத்தைத் தன்வசப்படுத்தும் உண்மையான அரசியல் மாற்றத்தை நோக்கித் தங்களது பயணம் இருக்கும் என்றார்.

மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலத்தில் ஒரே நேரத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் மாபெரும் “திருவனம்” பசுமை நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், எதிர்வரும் காலங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தலில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு மக்கள் மத்தியில் புதியதொரு அரசியல் மாற்றத்தை உருவாக்கும் இலக்குடன் தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.