செப்டம்பரில் புதிய கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை - பி.எல்.சந்தோஷுடன் திடீர் சந்திப்பு!
தமிழக பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, பா.ஜ.க-விலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தனியாகப் புதிய கட்சித் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் காட்டுத்தீயாய்ப் பரவி வரும் நிலையில், அவரது மிக நெருங்கிய வட்டார நிர்வாகிகளிடம் இருந்து விளக்கம் கிடைத்துள்ளது.

"அண்ணாமலை பா.ஜ.க-வை விட்டு விலகுகிறார் என்பதும், புதிய கட்சி தொடங்குகிறார் என்பதும் தற்போதைக்கு வெறும் வதந்திகளே. வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பின் அவர் புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. தற்போதைய சூழலில் அவர் எவ்வித புதிய அரசியல் அமைப்பையும் தொடங்க மாட்டார்" என்று அவரது தரப்பு நிர்வாகிகள் இந்தத் தகவலை மறுத்துள்ளனர்.
புதிய கட்சித் தகவல்கள் ஒருபுறம் விவாதிக்கப்பட்டாலும், அண்ணாமலையின் தற்போதைய டெல்லிப் பயணம் மற்றும் அங்குள்ள பா.ஜ.க தேசியத் தலைவர்களுடனான சந்திப்புகள் இந்த விவகாரத்தின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளன. டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, இன்று பா.ஜ.க-வின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை நேரில் சந்தித்துத் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து மிக நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுவதற்காக அண்ணாமலை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று மதியம் வரை அவருக்கு அமித் ஷாவைச் சந்திப்பதற்கான அனுமதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றும், இதனால் அவர் டெல்லியிலேயே தொடர்ந்து காத்திருப்பதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
