இன்று அமித் ஷாவைச் சந்திக்கிறார் அண்ணாமலை; பாஜவிலிருந்து விலகலுக்கான காரணத்தை விளக்க இருப்பதாக தகவல்!

 
அண்ணாமலை அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை, இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரங்களில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அண்ணாமலை டெல்லிக்கு மேற்கொண்டுள்ள இந்த முக்கியப் பயணத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சேர்த்து, பாஜக தேசியத் தலைவர்களில் ஒருவரான நிதின் நபின் மற்றும் கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷ் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவராகப் பணியாற்றி, பின்னர் கடந்த 2025-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, தற்போது கட்சியின் அடிப்படைப் பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விலக முடிவெடுத்துள்ளதாகத் டெல்லி அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தேசியத் தலைமை அண்மைக் காலமாக எடுத்து வரும் சில முக்கிய அரசியல் மற்றும் கூட்டணிக் கொள்கை முடிவுகளில் தனக்கு உடன்பாடு இல்லாததால், அவர் இந்தத் தீவிர முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அண்ணாமலை ரஜினி

இன்றைய கூட்டத்தில், தான் ஏன் கட்சியை விட்டு நிரந்தரமாக விலகத் திட்டமிட்டுள்ளேன் என்பது குறித்தான தனது விரிவான விளக்கங்கள் மற்றும் அதற்கான தகுந்த காரணங்களை அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் அவர் நேரடியாக முன்வைக்க உள்ளார் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, அண்ணாமலை தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, தமிழக பாஜகவினர் மற்றும் அரசியல் நோக்கர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.