காக்கி - வெள்ளை உடையில் வந்த அண்ணாமலை - விஜய், ஜெகன் மோகன் ரெட்டியை உதாரணம் காட்டிப் பதில்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து வாக்களித்து வரும் நிலையில், அதே போன்ற உடையில் வந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தனது உடைக்கும் மற்ற கட்சிகளின் குறியீடுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த அண்ணாமலை, "நான் காவல் துறையில் பணியாற்றியவன் என்பதால் காக்கி நிறத்தின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால் காக்கி பேண்ட் அணிகிறேன். அரசியலுக்கு வந்த பிறகு வெள்ளைச் சட்டை அணிவது வழக்கமாகிவிட்டது."

"நான் இன்று மட்டுமல்ல, பல நேரங்களில் இதே உடையைத்தான் அணிந்திருக்கிறேன். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தம்பி விஜய் ஆகியோரும் இதே போன்ற உடையைத்தான் அணிகிறார்கள்."
"என்னுடைய இந்த உடை அலங்காரத்திற்கும், வேறு எந்தவொரு அரசியல் குறியீட்டிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இதை ஒரு சர்ச்சையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இன்று காலை நடிகர் சிபிராஜ், விஜய்யின் பெற்றோர் மற்றும் தவெக தொண்டர்கள் எனப் பலரும் இதே வெள்ளை - காக்கி உடையில் வாக்களித்து வரும் சூழலில், அண்ணாமலையின் இந்த விளக்கம் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக-வின் வருகை பாஜகவின் வாக்குகளைப் பாதிக்கும் என ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த 'உடை விளக்கம்' அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
