“அண்ணாமலையின் முடிவு ஏமாற்றத்தை தந்துள்ளது”.. பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தம்!

 
அண்ணாமலை கருப்பு முருகானந்தம் அண்ணாமலை கருப்பு முருகானந்தம்

அண்ணாமலையின் இந்தத் திடீர் விலகல் மற்றும் புதிய கட்சித் தொடக்கம் குறித்துப் பேசியுள்ள பாஜவின் மூத்த நிர்வாகியும், மாநிலப் பொதுச்செயலாளருமான கருப்பு முருகானந்தம், அண்ணாமலையின் இந்த தனிப்பட்ட முடிவு கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தலைவராக இருந்த காலகட்டத்தில் கட்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்துக் கருப்பு முருகானந்தம் பேசுகையில் சுட்டிக்காட்டியுள்ளார். "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக இருந்து மிகக் கடுமையாக உழைத்தார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதனை நாங்களும், கட்சியின் தேசியத் தலைமையும் எப்போதும் முழுமையாக அங்கீகரிக்கிறோம்."

அண்ணாமலை

அண்ணாமலையின் விலகலால் பாஜவிற்கு எவ்வித தொய்வும் ஏற்படாது என்பதைத் திட்டவட்டமாக விளக்கும் வகையில் அவர் சில முக்கியக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். "அண்ணாமலை அவர்கள் பாஜகவிலிருந்து விலகி எடுத்திருப்பதாகக் கூறப்படும் இந்தத் தனிப்பட்ட முடிவுகள் காலம் காலமாக இந்த இயக்கத்திற்காக இரத்தம் சிந்தி உழைத்த கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும், ஆழமான மனவருத்தத்தையும் தந்துள்ளது.

ஆனால், அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், 'பாரதிய ஜனதா கட்சி என்பது எப்போதுமே எந்தவொரு தனிநபரையோ அல்லது தனிப்பட்ட ஆளுமையையோ மட்டும் நம்பி இயங்கும் கட்சி அல்ல.' இது தூய்மையான கொள்கைகளையும், அசைக்க முடியாத தேசபக்தியையும் மட்டுமே தனது அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு மாபெரும் பேரியக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.