அண்ணாமலையின் முதல் மாநாடு.. தொண்டர்களுக்குக் குடிநீர், பிஸ்கட் வழங்கி உபசரிப்பு!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மாலை, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிதாகத் தொடங்கியுள்ள 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் முதலாவது பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து அவர் தொடங்கியுள்ள இந்த அமைப்பின் முதல் பொதுக்கூட்டம் என்பதால், இது ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி பகுதியில் சுமார் 20,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் பிரத்யேக மேடைகளுடன் இந்த மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு "போதைப்பொருள் இல்லாத பொள்ளாச்சி / போதைப்பொருள் இல்லாத தமிழகம்" என்ற விழிப்புணர்வு முழக்கத்தை முன்னிறுத்தி நடத்தப்படுகிறது.

மாநாட்டின் தொடக்கமாகப் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பகுதிகள் பொள்ளாச்சியின் அடையாளங்களான ஆழியாறு அணை மற்றும் தென்னந்தோப்புகளின் பின்னணிப் படங்களைக் கொண்டு உள்ளூர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விஐபி பாஸ்கள் அல்லது சிறப்பு அழைப்புகள் ஏதுமின்றி, அண்ணாமலையின் பேச்சைக் கேட்கத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், தொண்டர்களும் தற்பொழுது மாநாட்டுத் திடலில் குவிந்து வருகின்றனர்.

வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாதவாறு தங்கு தடையின்றிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டர் படையினர் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு வழங்கி வருகின்றனர்.
பந்தலுக்குள் நுழைய இயலாதவர்களுக்காக வெளியேயும் பிரம்மாண்ட எல்இடி திரைகள் வைக்கப்பட்டு நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் உச்சக்கட்டமாக அண்ணாமலை ஆற்றவுள்ள கொள்கை விளக்க உரை மற்றும் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த அறிவிப்பைத் திரண்டுள்ள தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
