"அண்ணாமலையின் புதிய கட்சி வேலைக்கு ஆகாது” - கே.பாலகிருஷ்ணன்!

 
சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் சிபிஎம் கே.பாலகிருஷ்ணன்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகியதைத் தொடர்ந்து கோவை பாஜவின் முக்கிய நிர்வாகி கே.வசந்தராஜன் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வரும் வேளையில், இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைச் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலையின் புதிய கட்சித் தொடக்கத்தைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

அண்ணாமலை தொடங்கியுள்ள 'இது நம்ம இயக்கம்' என்ற புதிய கட்சிக்குத் தமிழகத்தில் எவ்வித அரசியல் தாக்கமும் இருக்காது என்று கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

"அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால், எங்களைப் பொறுத்தவரை பாஜவிற்கும் இதற்கும் எவ்வித பெரிய வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. பழைய கொள்கைகளுடன், 'பாஜக' என்ற பெயர் மட்டுமே இந்த புதிய கட்சியில் மாற்றப்பட்டிருக்கும். இதனால் அண்ணாமலையின் இந்த புதிய முயற்சிக்குத் தமிழகத்தில் எவ்விதப் பலனும் கிடைக்கப் போவதில்லை."

தமிழகத்தில் பாஜகவின் சித்தாந்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் தான் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற ஒரு புதிய கோணத்தை அவர் முன்வைத்துள்ளார். "கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் மதவாத பாஜகவை எப்படியாவது உயிர்ப்பிக்கவும், காலூன்ற வைக்கவும் அவர்கள் எவ்வளவோ போராட்டங்களையும், யாத்திரைகளையும் நடத்தி முயன்று பார்த்தார்கள். ஆனால், விழிப்புணர்வு மிக்கத் தமிழக மக்களிடம் அது எடுபடவில்லை. இதனால் தங்களது வேஷத்தை மாற்றிக்கொண்டு, வேறொரு பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து, அதன் மூலமாவது தமிழக அரசியலில் ஏதாவது சாதிக்க முடியுமா என பார்க்கிறார்கள்" என்று அவர் சாடினார்.