திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அசாமிலிருந்து வருகை தந்தது 'ஹீராலால்' குட்டி யானை!

 
திருவண்ணாமலை ஹீராலால் அசாம்  யானை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அசாம் மாநிலத்திலிருந்து 8 வயது ஆண் யானைக் குட்டியான 'ஹீராலால்' புதிதாக அழைத்து வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் குட்டி யானைக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அசாம் மாநிலத்திலிருந்து லாரி மூலம் நேற்று இரவு திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட 'ஹீராலால்' என்னும் 8 வயது ஆண் யானைக்குட்டிக்கு, ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபம் எதிரே சிவாச்சாரியார்கள் கஜ பூஜை செய்து வரவேற்பு அளித்தனர். மேலும், கோயில் சார்பில் யானைக்குப் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்துச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை ஹீராலால் அசாம்  யானை

நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயிலுக்கு யானைக் குட்டி வந்துள்ளதைக் கண்ட பக்தர்கள், "அழகா, க்யூட்டா இருக்கு... கண்ணுப் படப் போகுது" என்று செல்லமாகக் கொஞ்சியதுடன், தங்களது செல்ஃபோன்களில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2018ஆம் ஆண்டு 'ருக்கு' என்ற பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. அதன் பிறகு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கோயிலுக்கு யானை கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.