பொங்கல் முதல் 'அன்னப்பூரணி சூப்பர் 6' திட்டம்.. யார் யாருக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்... முழு விபரம்!

 
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்  இலவச சிலிண்டர்

தமிழ்நாட்டுப் பெண்களின் குடும்பப் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில், தமிழக அரசு 'அன்னப்பூரணி சூப்பர் 6' என்ற சிறப்புத் திட்டத்தை அறிவித்து, அதற்கான முதற்கட்டச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காகத் தேவைப்படும் தொகையானது, நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து பார்க்கலாம். 

இலவச சிலிண்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் ரூ. 2,50,000 (ரூ. 2.50 லட்சம்)-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விளிம்புநிலை மக்களையும் எளிய குடும்பங்களையும் சென்றடையும் வகையில், சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முழுத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.

சிலிண்டர்

பயனாளிகள் அனைவரும் பாரத் கேஸ், இண்டேன் அல்லது ஹெச்பி ஆகிய ஏதேனும் ஒரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் செல்லுபடியாகும் பெயரில் முறையான வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் இணைப்புப் புத்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண் ஆகியவை பயன்பாட்டில் இருப்பது அவசியமாகும்.

அரசின் மானியம்/தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளதால், பயனாளி வைத்திருக்கும் வங்கி நிர்வாகக் கணக்குடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

யாரெல்லாம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது?

குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், அக்குடும்பம் இத்திட்டத்திற்குத் தகுதியற்றது. அரசுத் துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் நிலையான பணியில் இருக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.

தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து தகுதியான வாடிக்கையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுத் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

சிலிண்டர்

பயனாளிகள் வழக்கம் போல் சிலிண்டருக்கான முழுத் தொகையைக் கொடுத்துச் சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின்னர், திட்டத்திற்கான சிலிண்டரின் முழுத் தொகையும் சில நாட்களுக்குள் நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கிற்குத் தமிழ்நாடு அரசால் மாற்றப்படும்.

வருடத்திற்குச் சுமார் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த 'அன்னப்பூரணி சூப்பர் 6' திட்டம், வரும் 2027 பொங்கல் பண்டிகை முதல் தமிழகத்தின் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.