தேர்தல் தேதிக்கான அறிவிப்பு... இன்று சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் - முக்கிய ஆலோசனைகள்!
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஆணையர்கள் சுக்பிர்சிங் சாந்து, விவேக் ஜோஷி உள்ளிட்டோரைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்கிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் ஆணையக் குழுவினர், அங்குள்ள தேர்தல் முன்னேற்பாடுகளை இன்று ஆய்வு செய்கின்றனர்.

நாளை பிப்ரவரி 26ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளை ஆணையம் கேட்க உள்ளது. அதன் பின்னர், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும்.

வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 27ம் தேதி மத்திய விசாரணை முகமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நண்பகலில் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்திப்பார். இந்த ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு டெல்லி செல்லும் ஆணையக் குழுவினர், மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
