ஆந்திராவில் மீண்டும் பேருந்து தீ விபத்து... பெரும் பரபரப்பு!

 
மின்கம்பி பேருந்து
 

ஆந்திரா மாநிலத்தில் மேலும் ஒரு பேருந்து தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம்-ஜெய்ப்பூர் இடையே சென்ற ஒடிசா ஆர்டிசி பேருந்து, இன்று காலை 7.45 மணியளவில் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் பச்சிபெண்டா மலைப்பாதை பகுதியில் சென்றபோது திடீரென தீப்பற்றியது. உடனடியாக டிரைவர் பேருந்தை சாலையோரம் நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினார்.

சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் எரிந்த நிலையில், தகவல் பெறப்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை.

சமீபத்திய காலங்களில் தெலுங்கானா மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் நடந்த பேருந்து விபத்துகள் இன்னும் நினைவில் இருக்கும் நிலையில், மீண்டும் ஆந்திராவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பயணிகளை பதட்டமடையச் செய்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய பேருந்து விபத்துகள் குறித்து விசாரணை நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.