பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுப்பு.... திரெளபதியம்மன் கோவிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்... விழுப்புரத்தில் பரபரப்பு!

 
திரௌபதி

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, அதேபகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள் நுழைய மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பல ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அந்த கோவிலுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.

இந்த உலகம் இவ்வளவு நவீனமயமான பிறகும், பிற்போக்குதனமாக செயல்படுவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருவிழா நடைபெற்றபோது, திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவர்கள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இது மற்றொரு தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

திரௌபதி

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. அவ்வப்போது மோதல் கூட ஏற்பட்டது. அதேநேரம் இதற்கு முடிவுகட்டவும், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவும் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், முடிவு எட்டப்படாததால் அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து மேல்பாதி கிராமத்தில் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்று வருவாய்த் துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர். 

திரௌபதி

மேலும் பதற்றத்தை தணிக்க கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது மேல்பாதி கிராமம் முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். கோவில் வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

From around the web