ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி வாக்குமூலம் - 7வது வழக்குப்பதிவு.. மேலாளர் கைது!

 
ஜெம் ​​​​​​​வீரமணி SRMU கண்ணையா மகன் பிரகாஷ்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகிப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 வயதான தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீது பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரானைட் தொழிலதிபர் வீரமணி போக்சோ கைது

சென்னையில் சிறுமிகளைத் துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் வாராந்திர செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், ஏற்கனவே ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வீரமணி மீது ஏழாவதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமும் வீரமணியின் பெண் தோழியான சாந்தியின் வீட்டில்தான் நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வீரமணி சாந்தி

இதனைத் தொடர்ந்து சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அவரது வீடு, கானத்தூரில் உள்ள பண்ணை வீடு மற்றும் சாமுண்டீஸ்வரி நேச்சுரல் கிரானைட் அலுவலகம் ஆகியவற்றில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஜெம் வீரமணிக்கு உடந்தையாகச் செயல்பட்டதும், அவர் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காகச் செய்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவியதும் விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து, 'ஜெம்' கிரானைட் நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை பாதிக்கப்பட்ட பதினொரு சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஜெம் வீரமணி மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.