நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ரூ.57,000 ரொக்கம் பறிமுதல்!
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரொக்கப் பணத்தைக் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சப் பணம் பரிமாறப்படுவதாக வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நேற்று மாலை நேரத்தின் போது அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளை அங்குள்ள அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.57,000 ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் தொடர்பாகப் புகழூர் நகராட்சி ஆணையர் வெங்கடாசலபதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஆணையர் தவிர்த்து அங்குப் பணியில் இருந்த 5-க்கும் மேற்பட்ட நகராட்சி அலுவலர்களிடமும், அந்தப் பணம் யாருடையது மற்றும் எந்த நோக்கத்திற்காகப் பெறப்பட்டது என்பது குறித்துத் தனித்தனியாகப் விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
