இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் அனுஜ் ஸ்ரீவத்ரி!
இந்திய செஸ் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் 100-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுஜ் ஸ்ரீவத்ரி (22).
பிலிப்பைன்ஸின் ஓசாமிஸ் நகரில் நடைபெற்ற 7-வது ASEAN Plus தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். போட்டியின் முதல் சுற்றில் தோல்வியைச் சந்தித்த அனுஜ், அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி 9 சுற்றுகளின் முடிவில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கான தகுதியையும் எட்டினார்.
இதன் மூலம் இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், 1988-ல் அந்தப் பட்டத்தைப் பெற்றார். சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 100 கிராண்ட்மாஸ்டர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. அனுஜின் சாதனைக்குச் செஸ் ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
