புதைக்கப்பட்ட சிறுமி அன்வியின் உடல் தோண்டியெடுத்து உடற்கூராய்வு... மகராஷ்டிராவில் பரபரப்பு!
மகாராஷ்டிர மாநிலம் யவதமால் மாவட்டத்தில் அன்வி என்ற சிறுமி கடந்த மே 1-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி மயங்கி விழுந்த நிலையில், சிறுமிக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் எதுவும் செய்யாமல், குடும்பத்தினர் அவசர அவசரமாக சிறுமியின் உடலை அடக்கம் செய்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுமி உயிரிழந்த உடனேயே எவ்வித அதிகாரப்பூர்வ மருத்துவ ஆய்வும் இன்றி உடல் புதைக்கப்பட்டதால், அவரது மரணத்திற்குப் பின்னால் மர்மம் இருப்பதாகப் பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. யவதமால் மாவட்ட மக்கள் இது குறித்துப் போலீசாருக்கும் ரகசியத் தகவல்கள் மற்றும் புகார்களை அனுப்பியிருந்தனர். சிறுமியின் மரணத்திற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்திற்குப் புலனாய்வுத் துறையினர் தள்ளப்பட்டனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து மயானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கேயே தற்காலிக மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியான பிறகே சிறுமியின் மரணத்திற்கான உண்மைத் தகவல் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
