ஆப்பிள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகும் டிம் குக் - புதிய சி.இ.ஓ யார்?

 
apple ceo apple ceo

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple), தனது தலைமைச் செயல் அதிகாரி   பொறுப்பில் இருந்து டிம் குக்  விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பிறகு பொறுப்பேற்ற டிம் குக், சுமார் 15 ஆண்டுகள் ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தி வந்துள்ளார். செப்டம்பர் 1, 2026 முதல் அவர் இந்தப் பதவியில் இருந்து விலகி, நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக  செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிம் குக் விலகுவதைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ-வாக ஜான் டெர்னஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல்  பிரிவின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஐபோன், ஐபாட் மற்றும் மேக் கணினிகளின் நவீன வடிவமைப்புகளில் ஜான் டெர்னஸ் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிம் குக் தனது அறிக்கையில், "ஜான் டெர்னஸ் ஒரு சிறந்த பொறியாளர் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை 4 டிரில்லியன் டாலராக உயர்த்திய பெருமை டிம் குக் அவர்களுக்கு உண்டு. இவரது காலத்தில் ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் போன்ற புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்தி வரும் சூழலில், வன்பொருள் துறையில் அனுபவம் வாய்ந்த ஜான் டெர்னஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பது அந்நிறுவனத்திற்கு ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால் ஆப்பிள் பங்குகள் மற்றும் தொழில்நுட்ப சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.