தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆப்பிள் லாரி... போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்... பரபரப்பு வீடியோ!
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள மடேடு கிராமத்திற்கு அருகே வாரங்கல் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிள் பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தின் காரணத்தால் லாரியில் ஏற்றி வரப்பட்ட ஏராளமான ஆப்பிள் பழப்பெட்டிகள் உடைந்து பழங்கள் அனைத்தும் நெடுஞ்சாலை முழுவதும் சிதறி விழுந்தன. விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநருக்கு உதவ முன்வராமல், அங்கிருந்த சிலர் சாலையில் சிதறிக் கிடந்த பழங்களை எடுக்கத் தொடங்கினர்.
விபத்து குறித்த தகவல் அருகில் உள்ள கிராமங்களுக்கு வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குத் திரண்டனர். பைகள், நெகிழிப் பைகள் மற்றும் கூடைகளுடன் வந்த மக்கள் சாலையில் சிதறிக் கிடந்த ஆப்பிள்களைப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். சுமார் 15 நிமிடங்களுக்குள் சாலையில் சிதறிக் கிடந்த அத்தனை பழங்களையும் பொதுமக்கள் முழுமையாக எடுத்துச் சென்றுவிட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சரக்கு இழப்பு ஏற்பட்டதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொற்றூர் காவல் துறையினர், அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்து வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்பு வாகனத்தின் உதவியுடன் அப்புறப்படுத்திப் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர். விபத்தில் காயம் அடைந்த ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான முதன்மை காரணம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
