தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு!

 
பட்டாசு பட்டாசுக்கடை

திருப்பூர் மாவட்டத்தில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊரகப் பகுதிகளில் தற்காலிகப் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே அறிவித்துள்ளார்.

தற்காலிகப் பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம் (2 நகல்கள்), பட்டா மற்றும் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். உரிமக் கட்டணமாக ரூ.700-ஐ குறிப்பிட்ட இணையதளம் வாயிலாகச் செலுத்தி, அதற்கான அசல் செலுத்துச்சீட்டை இணைக்க வேண்டும்.

பட்டாசு

கடைக்கான இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டின் சொத்துவரி செலுத்திய ரசீது நகல் தேவை. வாடகைக் கட்டிடமாக இருப்பின், வரி செலுத்திய ரசீதுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.200 முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம் அளிக்கப்பட வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் புகைப்படம், முகவரிச் சான்று மற்றும் தீயணைப்புத்துறை தடையின்மை சான்று ஆகியவையும் அவசியம்.

தகுதியான ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.