என்ஜினீயரிங் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் 2.5 லட்சத்தைக் கடந்தது - ஜூன் 2 கடைசி தேதி!
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர் கல்வியில் சேரக் காத்திருக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை செயல்முறைகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தொழில்நுட்ப மற்றும் பொதுக் கலைப் படிப்புகளில் சேர மாணவர்கள் காட்டும் ஆர்வம் காரணமாக ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகளின் எண்ணிக்கை நடப்பு வாரத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 3-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் 8,500 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 5,000 முதல் அதிகபட்சமாக 20,000 விண்ணப்பங்கள் வரை இணையதளம் வழியாகப் பெறப்பட்டு வருகின்றன.

விண்ணப்பப் பதிவின் 23-ஆவது நாளான நேற்று மாலை வரையிலான அதிகாரப்பூர்வ நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 51 ஆயிரத்து 796 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டுள்ளன. சேர்க்கைப் பதிவின் தற்போதைய புள்ளிவிவரங்களின் படி மொத்த விண்ணப்பங்கள்: 2,51,796. கட்டணம் செலுத்தியவர்கள்: 1,80,063 (கட்டணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மட்டுமே சேர்க்கைக்கான இறுதி எண்ணிக்கையாகக் கணக்கில் கொள்ளப்படும்).
இதில் சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்கள் 1,40,478 மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை வெற்றிகரமாக இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி ஆகும்.
இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பப் பதிவும் தற்பொழுது www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மே 29-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் நலன் மற்றும் கூடுதல் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி என உயர்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூன் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் கல்லூரிகள் வாரியாகத் தரவரிசைப் பட்டியல்வெளியிடப்படும். ஜூன் 5ம் தேதி முதல் மாணவர்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வு முறைப்படி தொடங்கவுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால், மாணவர்கள் இறுதி நேரத் தொழில்நுட்பத் தடங்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
