இன்று முதல் பி.எட்., முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான பி.எட். பட்டப்படிப்பு மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை (பி.ஜி.) பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று ஜூன் 19ம் தேதி முதல் முறைப்படி தொடங்கியுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 21 கல்லூரிகளில் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. தகுதி வாய்ந்த மாணவர்கள் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் மாணவர்கள் இணையவழியில் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். மாணவர்களுக்கான இறுதி இட ஒதுக்கீடு ஆணை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையைத் தங்களது உள்நுழைவு ஐடி மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழக்கமான வகுப்புகள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
இதேபோன்று, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கையும் இன்று முதல் தொடங்குகிறது. 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 24,334 முதுநிலை பட்டப்படிப்பு இடங்கள் நடப்பு கல்வி ஆண்டில் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களில் மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதற்கட்ட தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியிடப்படும். சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் பிற பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும். அனைத்து முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் வகுப்புகள் முறைப்படி தொடங்கும்.

தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்களின் தற்போதைய இளநிலைப் பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் இதர முக்கிய ஆவணங்களுடன் www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று தங்களுக்கான இடங்களை இணைய வழியிலேயே தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, உரிய தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்குப் பிடித்தமான பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு உயர்கல்வித் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
