முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் கூட. வயது மூப்பின் காரணமாக கட்சிப்பணிகளில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் சக்கர நாற்காலியில் இருந்து எழ முயற்சித்த போது, தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, அவருக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் மீண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் பொருளாளராக வர வேண்டும் என வலியுறுத்தி வந்த வீராசாமி, தான் வகித்து வந்த கட்சியின் பொருளாளர் பதவியை விட்டுக்கொடுத்தார். கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்சிப் பணிகளில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றார்.
