16 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை? கர்நாடக அரசின் அதிரடித் திட்டம்!
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. டிஜிட்டல் அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் கேம்களுக்குக் குழந்தைகள் அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கையை எடுக்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

செல்போன் பயன்பாட்டால் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் மற்றும் மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, கல்வி மற்றும் உளவியல் நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றை அரசு விரைவில் அமைக்கவுள்ளது. சமீபத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், "குழந்தைகள் மொபைல் போன் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க வேண்டியது அவசியம்" எனக் குறிப்பிட்டு, அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுள்ளார்.
டிஜிட்டல் திரையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்களிடமிருந்து அரசுக்கு அதிகப்படியான கோரிக்கைகள் வந்துள்ளதால், இந்தத் திட்டம் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. இது முழுமையான தடையாக இருக்குமா அல்லது சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஏற்கனவே கர்நாடக அரசு 'மொபைல் விடு, புத்தகம் எடு' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே நிலவும் டிஜிட்டல் அடிமைத்தனத்தைக் குறைக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் கோவா போன்ற அண்டை மாநிலங்களும் இதே போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
