டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாகிறதா? - ஊழியர்கள் போராட்டத்திற்கு அமைச்சர் விக்னேஷ் பதில்!

 
டாஸ்மாக்

தமிழகத்தில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், "டாஸ்மாக் தனியார்மயமே ஆகாது என்று நாங்கள் கூறவில்லை; சூழல் உருவானால் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்

2003-ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா எதற்காகத் தனியார் மதுக்கடைகளை மூடினார் என்பதையும், இத்தகைய மிகப்பெரிய முடிவை எடுப்பதற்கான சூழல் என்ன என்பதையும் அரசு விரிவாக ஆராய வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ரூ.14,000-ல் இருந்து ரூ.33,000 வரை உயர்த்தியுள்ளது. மேலும் வார விடுமுறை, மாதத்தில் 2 நாட்கள் விடுமுறை, இலவச சீருடை மற்றும் தைப்பிற்காக ரூ.6,000, பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000, மருத்துவக் காப்பீடு எனப் பல திட்டங்களைச் செய்து கொடுத்துள்ளதாகப் பட்டியலிட்டார்.

அமைச்சர் விக்னேஷ்

கடையில் உண்மையான ஊழியர் யார் என்பதை அடையாளப்படுத்தவும், அவர்களுக்குரிய மரியாதையை பெற்று தரவுமே சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நேற்று நடந்த கடையடைப்புப் போராட்டத்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், "சுமார் 10 லட்சம் பேராவது நேற்று மது அருந்தாமல், அந்த ரூ.150-ஐத் தங்களின் குடும்பத்திற்கு கொடுத்திருப்பார்கள் என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷம்" என்று அமைச்சர் சுவாரசியமாகக் குறிப்பிட்டார்.

காலி பாட்டில் சேகரிக்கும் விவகாரத்தில் ஊழியர்கள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தைக் தீவிரப்படுத்தி வரும் சூழலில், அமைச்சரின் இந்த எச்சரிக்கை விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூட்டைப் பிடித்துள்ளது.